Sep 26, 2026 - 02:35 PM

இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையாளர் ஞானேஷ் குமார் எதிர்வரும் சனிக்கிழமைக்குள் பதவி விலகாவிட்டால், நாடு தழுவிய போராட்டத்தை நடத்தப்போவதாக 'கொக்ரோச் ஜனதா கட்சி' (CJP)என்ற இளைஞர் அமைப்பு எச்சரித்துள்ளது.
ஞானேஷ் குமார் விலகத் தவறினால், அக்டோபர் 2 ஆம் திகதி காந்தி ஜெயந்தி அன்று மும்பையிலிருந்து இந்தத் தொடர் போராட்டங்கள் தொடங்கப்படும் என அந்த அமைப்பின் நிறுவுனரான அபீஜித் தீப்கே தெரிவித்துள்ளார்.
வாக்காளர் பட்டியலில் முறைகேடாக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக வெளியான செய்தித்தாளின் அறிக்கையைத் தொடர்ந்து, தலைமைத் தேர்தல் ஆணையாளர் 48 மணி நேரத்துக்குள் பதவி விலக வேண்டும் என இந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு (BJP) சாதகமாக வாக்காளர் பட்டியல்கள் மாற்றப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
கடந்த 10 மாதங்களில் வாக்காளர் பட்டியலைப் புதுப்பிக்கும் நடைமுறை தொடர்பாக இரு தேர்தல் ஆணையாளர்கள் குறைந்தது 14 முறை ஞானேஷ் குமாரிடம் தங்களது கேள்விகளையும் கவலைகளையும் எழுப்பியுள்ளதாக செய்திகள் வெளியாகி அரசியல் புயலைக் கிளப்பியுள்ளன.
இந்தநிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட முதன்மை எதிர்க்கட்சிகள் ஞானேஷ் குமாரைக் கைது செய்யக் கோரியும், அவரைப் பதவியிலிருந்து நீக்கக் கோரியும் மாநிலத் தேர்தல் அலுவலகங்களை நோக்கிப் போராட்டங்களை அறிவித்துள்ளன.
எனினும், இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள தேர்தல் ஆணைக்குழு, ஒரு அமைப்பில் வேறுபட்ட கருத்துக்கள் எழுவது இயல்பான ஜனநாயக நடைமுறைதான் என்றும், தங்கள் நடவடிக்கைகள் அனைத்தும் சட்டப்பூர்வமானவை என்றும் தெரிவித்துள்ளது.
எதிர்க்கட்சிகள் தேர்தலில் தொடர்ந்து தோற்பதால் தேர்தல் ஆணைக்குழுவின் மீது வீண் பழி சுமத்துவதாக பாரதீய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் சம்பித் பாத்ரா குற்றம் சாட்டியுள்ளார்.
வேலையில்லா இந்திய இளைஞர்களை "கரப்பான் பூச்சிகள்" (Cockroaches) மற்றும் "ஒட்டுண்ணிகள்" என்று இந்திய பிரதம நீதியரசர் ஒப்பிட்டுப் பேசியதைத் தொடர்ந்து, மே மாதம் சமூக வலைத்தளங்களில் ஒரு நகைச்சுவையாக இந்த 'கொக்ரோச் ஜனதா கட்சி' தொடங்கப்பட்டது.
கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற, வினாத்தாள் கசிவு விவகாரத்தில் இந்த அமைப்பு நடத்திய போராட்டத்தைத் தொடர்ந்து, மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியிலிருந்து விலகியமை குறிப்பிடத்தக்கது.































