Sep 26, 2026 - 07:45 AM

தெஹிவளை, சிறிசங்கபோ மாவத்தையில் உள்ள வீடொன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்தி இரண்டு பிள்ளைகளைக் கொலை செய்த சம்பவத்திற்கு உதவி ஒத்தாசை புரிந்த மேலும் இரண்டு சந்தேகநபர்கள் மேல் மாகாண தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று (25) கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த மாதம் 11ஆம் திகதி குறித்த கைக்குண்டுத் தாக்குதலை நடத்தி இரண்டு பிள்ளைகளைக் கொலை செய்தமை மற்றும் அவர்களின் தந்தைக்குக் பலத்த காயம் ஏற்படுத்தியமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளின் கீழ் இந்த சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்தக் குற்றத்தைச் செய்த பிரதான சந்தேகநபர் மற்றும் அதற்கு உதவிகளை வழங்கிய இரு சந்தேகநபர்கள் கடந்த 17ஆம் திகதி ரிதீமாலியத்த, தெஹிவளை மற்றும் பொரலஸ்கமுவ பொலிஸ் பிரிவுகளில் வைத்து புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், இந்தக் குற்றத்திற்கு உதவிகளை வழங்கிய சந்தேகத்தின் பேரிலேயே இந்தச் சந்தேகநபர்கள் தெஹிவளை பொலிஸ் பிரிவில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது குறித்த சந்தேகநபர்களிடமிருந்து 11 கிராமும் 960 மில்லிகிராமும் அளவில் ஐஸ் போதைப்பொருள் மற்றும் குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட முச்சக்கரவண்டி ஒன்றும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பிலியந்தலை மற்றும் கஹதுடுவை பகுதிகளைச் சேர்ந்த 30 மற்றும் 31 வயதுடையவர்கள் என்பதுடன், மேல் மாகாண தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.































