Sep 25, 2026 - 02:01 PM

பலாங்கொடை உடகந்த தோட்ட விநாயகர் சிலை ஒன்று இனந்தெரியாதோரால் உடைக்கப்படும் சம்பவம் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் பணிப்புரை விடுத்துள்ளார்.
பலாங்கொட உடகந்த தோட்ட பகுதியில் ஆலயத்தில் காணப்பட்ட விநாயகர் சிலை ஒன்று நேற்று (24) இனந்தெரியாத நபர்களால் உடைக்கப்பட்டுள்ளது.
முச்சக்கரவண்டி ஒன்றில் பிரவேசிக்கும் சிலர் அங்குள்ள விநாயகர் சிலையினை தாக்கி சேதமாக்கும் காட்சி அங்குள்ள சிசிரிவி கமராக்களில் பதிவாகியுள்ளது.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் பிரதேசமக்கள் இணைந்து பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றையும் பதிவு செய்துள்ளனர்.
சந்தேகநபர்களை உடனடியாக கைது செய்யுமாறு வலியுறுத்தி பிரதேச மக்கள் நேற்று பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக பாரிய எதிர்ப்பினையும் வௌிப்படுத்தியிருந்தனர்.
இதனையடுத்து குறித்த சம்பவம் குறித்து மலையக பெருந்தோட்டம் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்நிலையில், சிலை உடைக்கப்பட்ட விவகாரம் குறித்த உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பலாங்கொடை பொலிஸாருக்கு பிரதி அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பலாங்கொட பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.































