Sep 16, 2026 - 05:34 PM

கிழக்கு மாகாண மக்களுக்கு ஒரே இடத்தில் விரிவான மற்றும் நவீன இருதய நோய் சிகிச்சை சேவைகளை வழங்கும் நோக்கில், திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையின் புதிய இருதய நோய் சிகிச்சை பிரிவு கட்டிட நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (16) முற்பகல் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
இருதய நோய்களைக் கண்டறிதல் மற்றும் சிகிச்சை அளிப்பதற்கான வசதிகளை வலுப்படுத்தும் வகையில், ஜப்பான் அரசின் நிதியுதவியுடன் ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகவரகத்தினால் (JICA) சுகாதார மற்றும் மருத்துவ சேவைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 2,403 மில்லியன் ரூபாய் செலவில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
அதிநவீன அறுவைச் சிகிச்சைக்கூடங்கள், வெளிநோயாளர் பிரிவுகள், விடுதி நோயாளி சிகிச்சை வசதிகள் மற்றும் முழுமையான ஆய்வகங்களைக் கொண்ட இந்த 8 மாடிகளைக் கொண்ட இருதய நோய் சிகிச்சைப் பிரிவு கட்டிடம் 2028 மே மாதமளவில் கட்டி முடிக்கப்படவுள்ளது.
நினைவுப் பலகையைத் திரைநீக்கம் செய்து கட்டிட நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி, வைத்தியசாலை ஊழியர்களுடனும் கலந்துரையாடினார்.
இதன்போது கருத்துரைத்த சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ உரையாற்றுகையில்,
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நாங்கள் இந்த இடத்திற்கு வந்து, இந்த இருதய நோய் சிகிச்சைப் பிரிவின் பணிகளை விரைவில் தொடங்குவோம் என்று உங்களுக்கு வாக்குறுதி அளித்தோம். 2028 மே மாதத்திற்குள் இந்த திட்டத்தின் நிர்மாணப் பணிகளை முடிக்க எதிர்பார்க்கிறோம்.
இன்று நாள் முழுவதும் ஜனாதிபதியின் தலைமையில் 4 பிரதான நிர்மாணப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்படவுள்ளது.
இன்று காலை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இந்திய நிதியுதவியின் கீழ் 600 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்படவுள்ள விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
அத்துடன், இந்த திருகோணமலை திட்டம் உபகரணங்களுடன் சேர்த்து 4,185 மில்லியன் ரூபாய் பெறுமதியுடைய திட்டமாகும். அதில் 2,403 மில்லியன் ரூபாய் நிர்மாணப் பணிகளுக்காகவும், 1,782 மில்லியன் ரூபாய் உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வின் போது உரையாற்றிய இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகியோ இசோமதா (Akio Isomata), திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வழங்கப்படும் இந்த உதவியானது, சுகாதாரம் தொடர்பாக ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால பங்களிப்பின் ஒரு பகுதியாகும் என்பதைக்கூற வேண்டும் என தெரிவித்தார்.
சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு இந்த வைத்தியசாலையிலேயே நடைபெற்ற கழிவு முகாமைத்துவ உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வில், இத்திட்டம் குறித்து அமைச்சருடன் கலந்துரையாடினோம். இத்திட்டம் இவ்வாறு நிஜமாவதைக் காண்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு உதவிகளை வழங்க ஜப்பான் சிறப்பு கவனம் செலுத்தியுள்ளது.
இலங்கையின் நீண்டகால மற்றும் நம்பகமான பங்காளியாக இருப்பதையிட்டு நான் பெருமையடைகிறேன். சுகாதாரத் துறையின் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் நிலையான சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பை நிறுவுவதற்கும் இலங்கை அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதாக ஜப்பான் எப்போதும் தயார் நிலையில் உள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.





























