Jun 10, 2026 - 11:11 PM
காலி, உடுகம கோரலேகம பகுதியில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றிற்குள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் புகுந்த மூவர், அங்கிருந்த இருவர் மீது கொடூரமான முறையில் தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த இருவர் தற்போது சிகிச்சைக்காக உடுகம ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் ஒருவரது காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தாக்குதலுடன் தொடர்புடைய முக்கிய சந்தேக நபர், ஹினிதும தொகுதி பிரபல அரசியல்வாதி ஒருவரின் நெருங்கிய ஆதரவாளர் என்பது பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அத்துடன், அவரது மனைவி நாகொட பகுதியில் கிராம உத்தியோகத்தராகப் பணியாற்றி வருவதாகவும் கூறப்படுகிறது.
ஏனைய இரு சந்தேக நபர்களும் மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சம்பவத்தின் பின்னர் மூன்று சந்தேகநபர்களும், குறித்த கிராம உத்தியோகத்தரும் தற்போது பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளனர்.
சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காக உடுகம மற்றும் நாகொட பொலிஸ் நிலையங்களினால் விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இரு காவல்துறை நிலையங்களும் இணைந்து மேற்கொண்டு வருகின்றன.





























