Nov 22, 2026 - 08:49 PM

ஒரு நாடு அபிவிருத்தி அடைவதற்குத் தொழில்முனைவோர் சிந்தனை கொண்ட மக்களும், அத்தகைய தலைமையும் உருவாக வேண்டும் என 'உலகளாவிய இலங்கைத் தொழில்முனைவோர் ஒன்றியத்தின்' (GLEC) ஸ்தாபகரும் தொழில்முனைவோருமான திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் பரந்து வாழும் இலங்கைத் தொழில்முனைவோரை ஒரே டிஜிட்டல் தளத்தில் ஒன்றிணைக்கும் 'GLEC சர்வதேச மாநாட்டுத் தொடரை' ஜப்பானில் இன்று (22) ஆரம்பித்து வைத்து உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
ஜப்பானின் சுகுபா (Tsukuba) நகரில் இன்று நண்பகல் ஆரம்பமான இந்த மாநாட்டில், அந்த நாட்டில் வசிக்கும் பெருமளவிலான இலங்கைத் தொழில்முனைவோர் கலந்துகொண்டனர்.
மாநாட்டைத் தொடர்ந்து, நிகழ்வில் பங்கேற்ற இலங்கையர்களுடன் திலித் ஜயவீர சிநேகபூர்வ கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.
உலகெங்கிலும் உள்ள இலங்கைத் தொழில்முனைவோர், தொழில்வல்லுநர்கள் மற்றும் புத்திஜீவிகளை ஒரே டிஜிட்டல் தளத்திற்குள் கொண்டு வரும் நோக்கில், திலித் ஜயவீரவின் எண்ணக்கருவில் உருவாக்கப்பட்ட GLEC டிஜிட்டல் தளம் அண்மையில் கொழும்பில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
இலங்கைத் தொழில்முனைவோருக்கு ஒரே இடத்தில் உலகளாவிய வாய்ப்புகளைத் திறந்துவிடும் இந்த புதிய டிஜிட்டல் தளம் குறித்து, வெளிநாடுகளில் வாழும் இலங்கைத் தொழில்முனைவோருக்குத் தெளிவுபடுத்தும் நோக்கிலேயே இந்த சர்வதேச மாநாட்டுத் தொடர் ஜப்பானிலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதற்காக ஜப்பானுக்குச் சென்ற திலித் ஜயவீர உள்ளிட்ட குழுவினருக்கு அங்குள்ள இலங்கையர்களால் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
































