Nov 22, 2026 - 05:19 PM

கொழும்பு - முகத்துவாரம் மீன்பிடித் துறைமுகத்துக்கு அருகில் ஏற்பட்ட திடீர் டீசல் கசிவை விரைவாகக் கட்டுப்படுத்துவதற்காக, இலங்கை கடலோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் எண்ணெய் விநியோக முகாமைத்துவக் குழுவினரால் விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கொழும்புத் துறைமுகத்தின் ஜய கொள்கலன் முனையத்துக்கு (JCT) சொந்தமான, புளூமெண்டல் பகுதியில் அமைந்துள்ள களஞ்சியத் தாங்கியொன்றின் குழாய் இணைப்பில் நேற்று (21) ஏற்பட்ட திடீர் உடைப்பே இந்த டீசல் கசிவுக்குக் காரணமாக அமைந்துள்ளது.
இவ்வாறு கசிந்த டீசல், அப்பகுதியின் பிரதான வடிகால் கால்வாய் வழியாகப் பாய்ந்து முகத்துவாரம் மீன்பிடித் துறைமுகத்துக்கு அருகில் கடல் பகுதியுடன் கலந்துள்ளது.
சம்பவம் தொடர்பான தகவல் கிடைத்ததும் உடனடியாகச் செயற்பட்ட கடலோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் எண்ணெய் விநியோக முகாமைத்துவக் குழு, டீசல் கடலில் மேலும் பரவுவதைத் தடுப்பதற்காக, கால்வாய் கடலில் இணையும் இடத்தில் விசேட எண்ணெய் தடுப்பை (Fence Boom) அமைக்க நடவடிக்கை எடுத்தது.
இதேவேளை, கரையோரப் பகுதிக்கு அடித்து வரப்பட்ட டீசலை அகற்றும் பணிகளும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கசிந்த எண்ணெயை முழுமையாக அகற்றி நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காகக் கடலோரப் படையின் எண்ணெய் விநியோக முகாமைத்துவக் குழுக்கள் தொடர்ச்சியாகச் செயற்பட்டு வருகின்றன.

































