Nov 22, 2026 - 04:56 PM
By யாழ். நிருபர் பிரதீபன்
By யாழ். நிருபர் பிரதீபன்

ஆணைக்குழுவினால் முன்மொழியப்பட்ட 'சுபோதினி' அறிக்கையை முழுமையாக நடைமுறைப்படுத்த புதிய அரசாங்கம் முன்வர வேண்டும் என இலங்கை தாய்மொழி ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இன்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, இலங்கை தாய்மொழி ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஸ்ரீகந்தநேசன் புயல்நேசன் இதனைத் தெரிவித்தார்.
எதிர்வரும் 30ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள ஆசிரியர்களின் சுகவீன விடுமுறைப் போராட்டத்திற்குத் தமது சங்கம் பூரண ஒத்துழைப்பு வழங்கும் என அவர் இதன்போது குறிப்பிட்டார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த புயல்நேசன், "சுபோதினி அறிக்கையை நடைமுறைப்படுத்தாமலேயே 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தற்போது அரசாங்கம் வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக ஏனைய அரச ஊழியர்களுக்கு நிதியை ஒதுக்கும்போது, ஆசிரியர்களுக்கும் சம்பள உயர்வை வழங்கியுள்ளது.
ஆனால், நாம் எதிர்பார்ப்பது வெறும் சம்பள உயர்வை அல்ல; சுபோதினி அறிக்கையின் ஊடாகச் சுட்டிக்காட்டப்பட்ட ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு முழுமையாகத் தீர்க்கப்பட வேண்டும் என்பதே எமது பிரதான கோரிக்கையாகும்" என வலியுறுத்தினார்.

































