Nov 10, 2026 - 12:00 PM

ஆந்திர மாநிலத் துணை முதல்வரும், தெலுங்குச் திரையுலகின் பிரபல நடிகருமான பவன் கல்யாண், தனது மனைவி அன்னா லெஸ்னெவாவை (Anna Lezhneva) பரஸ்பர சம்மதத்துடன் பிரிய முடிவெடுத்துள்ளனர்.
தெலுங்குச் சினிமாவின் முன்னணி நடிகரான பவன் கல்யாண், கடந்த 2014-இல் 'ஜன சேனா' கட்சியைத் தொடங்கினார். சமீபத்தில் நடைபெற்ற ஆந்திரச் சட்டமன்றத் தேர்தலில் தெலுங்கு தேசம் மற்றும் பாஜக கூட்டணியுடன் இணைந்து போட்டியிட்டு வெற்றிபெற்ற அவர், தற்போது ஆந்திராவின் துணை முதல்வராகப் பொறுப்பு வகித்து வருகிறார்.
தனது 13 ஆண்டுகால திருமண பந்தம் முடிவுக்கு வருவதாக பவன் கல்யாணும், அன்னா லெஸ்னெவாவும் கூட்டறிக்கை ஒன்றின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், "எங்கள் வாழ்வின் குறிப்பிடத்தக்க பகுதியைப் பகிர்ந்து கொண்ட நிலையில், பரஸ்பர புரிதலுடன் பிரிந்து வாழ முடிவெடுத்துள்ளோம். எங்களது திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்திருந்தாலும், நல்ல நண்பர்களாகத் தொடர விரும்புகிறோம்.
எங்களது பிள்ளைகளுக்கு அர்ப்பணிப்புள்ள பெற்றோராக இருப்போம். இந்த கடினமான சூழலில் எங்களது தனியுரிமைக்கு (Privacy) அனைவரும் மதிப்பளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். இந்தப் பயணத்தில் எங்களுடன் உறுதுணையாக இருந்த அனைவருக்கும் எங்களது நன்றிகள்." என குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2011 ஆம் ஆண்டில் வெளியான ‘டீன் மார்’ (Teen Maar) திரைப்படத்தில் இணைந்து நடித்தபோது பவன் கல்யாண் - அன்னா லெஸ்னெவா இடையே காதல் மலர்ந்தது. அதைத்தொடர்ந்து, கடந்த 2013ஆம் ஆண்டு ரஷ்யாவைச் சேர்ந்த அன்னாவை பவன் கல்யாண் திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதியருக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர்.
முன்னதாக, பவன் கல்யாண் நந்தினி மற்றும் நடிகை ரேணு தேசாய் ஆகியோரைத் திருமணம் செய்து, பின்னர் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

































