Nov 3, 2026 - 01:07 PM

ஏதாவது ஒரு சம்பவம் மனதைப் பாதித்துவிட்டால், அதைப் பற்றியே மீண்டும் மீண்டும் சிந்தித்துக் கொண்டிருப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். சாதாரணமாகக் கடந்து போகக்கூடிய விஷயங்களைக்கூட மனதில் போட்டு குழப்பிக் கொள்வார்கள்.
அந்தச் சிந்தனைகளில் இருந்து மீள்வதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்வார்கள்..'இப்படி செய்திருக்கலாமோ?', 'அப்படி செய்திருந்தால் சரியாக இருந்திருக்குமோ?', 'அவசரப்பட்டுவிட்டோமோ?' என நடந்த சம்பவங்களை நினைத்து வருந்துவார்கள்.
இத்தகைய தொடர் சிந்தனைகள் மனதில் கவலையையும் பதற்றத்தையும் அதிகரிக்கக்கூடும். இதனால் அன்றாட வேலைகளில் கவனம் செலுத்துவதும் கடினமாகலாம்.
மனதைப் பாதிக்கும் சம்பவங்கள் நிகழும்போது, அவற்றைப் பற்றித் தொடர்ந்து சிந்திப்பதற்குப் பதிலாக மனதை அமைதிப்படுத்த முயற்சிக்க வேண்டும். தேவையற்ற சிந்தனைகள் நீண்ட நேரம் தொடர்ந்தால் மனச்சோர்வும் மன அழுத்தமும் ஏற்படலாம். எனவே, மன ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்துவது அவசியம்.
மனதில் பதற்றம் அதிகரிப்பதாக உணரும்போது ஆழமாக மூச்சை உள்ளிழுத்து மெதுவாக வெளியே விடலாம். இது உடலையும் மனதையும் அமைதிப்படுத்த உதவும். யோகா, தியானம் போன்ற பயிற்சிகளையும் மேற்கொள்ளலாம். அமைதியான சூழலில் சிறிது நேரம் ஓய்வெடுப்பதும் நல்லது.
சிலர் சிறிய விஷயங்களுக்குக்கூட அதிகமாகப் பதற்றமடைவார்கள். அத்தகைய நேரங்களில் ஒரே இடத்தில் அமர்ந்து நடந்த சம்பவத்தையே நினைத்துக் கொண்டிருக்காமல் வேறு வேலைகளில் கவனம் செலுத்தலாம். நடைப்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல் போன்ற உடல் செயல்பாடுகள் மனநிலையை மேம்படுத்த உதவக்கூடும்.
மனதில் எதிர்மறையான எண்ணங்கள் அதிகமாக இருக்கும்போது மகிழ்ச்சியான தருணங்களை நினைத்துப் பார்ப்பது கடினமாக இருக்கலாம். இருப்பினும், வாழ்க்கையில் இதுவரை அடைந்த சிறிய வெற்றிகளையும் சாதனைகளையும் நினைவுகூருங்கள்.
இது தன்னம்பிக்கையை அதிகரித்து, நேர்மறையான எண்ணங்களை வளர்க்க உதவும்.
கடந்த காலத்தில் செய்த தவறுகளை நினைத்து தொடர்ந்து வருந்துவது மன அமைதியைப் பாதிக்கலாம். நடந்தவற்றிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, அதே தவறுகள் மீண்டும் நிகழாமல் பார்த்துக்கொள்வது நல்லது. கடந்த காலத்தை மாற்ற முடியாது என்பதை ஏற்றுக்கொண்டு, நிகழ்காலத்தில் கவனம் செலுத்தப் பழக வேண்டும்.
மன அழுத்தத்தைக் குறைக்க போதுமான தூக்கம், சீரான உணவு, உடற்பயிற்சி மற்றும் குடும்பத்தினருடன் மனம் விட்டுப் பேசுவது உதவியாக இருக்கும். தேவையற்ற சிந்தனைகள் தொடர்ந்து நீடித்து அன்றாட வாழ்க்கையைப் பாதித்தால் மனநல நிபுணரின் உதவியை நாடலாம். மன ஆரோக்கியத்திற்கும் உடல் ஆரோக்கியத்தைப் போலவே முக்கியத்துவம் அளிப்பது அவசியம்.
































