Nov 2, 2026 - 11:54 PM

பிரித்தானிய சந்தையில் இலங்கையின் ஏற்றுமதி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதையும், இரு நாடுகளுக்குமிடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை, (EDB) ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயத்துடன் இணைந்து லண்டனில் இரு நாள் வணிக ஊக்குவிப்பு நிகழ்ச்சி திட்டமொன்றை நடத்தியுள்ளது.
பிரித்தானிய கொள்வனவாளர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் வணிக அமைப்புகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி 140 க்கும் மேற்பட்டோர் இதில் கலந்துகொண்டுள்ளனர்.
அமைச்சர் வசந்த சமரசிங்க, கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர மற்றும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவரும் பிரதான நிறைவேற்று அதிகாரியுமான மங்கல விஜேசிங்க ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
மன்றத்தில் உரையாற்றிய அமைச்சர், இலங்கை பொருளாதாரம் 2024 மற்றும் 2025 ஆகிய இரண்டு ஆண்டுகளிலும் 5 சதவீத வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
முதலீட்டுக்கு உகந்த சூழலை உருவாக்குவதற்காக ஒழுங்குமுறைச் செயல்பாடுகளை எளிமையாக்குதல், அரச நிறுவனங்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல் மற்றும் அரச சேவையின் திறனை அதிகரித்தல் என்பவற்றில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.
அத்துடன், 2025 ஆம் ஆண்டில் தொழில் துறை 7.8 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளதாக திலகா ஜயசுந்தர சுட்டிக்காட்டினார்.
அவ்வாண்டில் நேரடி வெளிநாட்டு முதலீடு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளதுடன், அது 72 சதவீத வளர்ச்சியாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் நிமல் சேனாதீர இரு நாடுகளின் நீண்டகால வர்த்தக உறவுகளை சுட்டிக்காட்டியதுடன், பிரித்தானியாவின் Developing Countries Trading Scheme (DCTS) நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் இலங்கை ஏற்றுமதிகளுக்குக் கிடைக்கும் சலுகைமிக்க சந்தைப் பிரவேசத்தின் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டினார்.
ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர் மங்கல விஜேசிங்க, இலங்கையின் நிலையான உற்பத்தி, சர்வதேச தரநிலைகள் மற்றும் ஏற்றுமதிப் போட்டித்தன்மை குறித்துக் கருத்துத் தெரிவித்ததுடன், பிரித்தானிய நிறுவனங்களுக்கு இலங்கை எக்ஸ்போ 2027 (Sri Lanka Expo 2027) இல் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தார்.
வர்த்தக மற்றும் முதலீட்டுச் கலந்துரையாடல்களின் போது புதிய வணிகக் கூட்டாண்மைகள் மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
2027 ஜனவரி 14 முதல் 17 வரை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள இலங்கை எக்ஸ்போ 2027 கண்காட்சி, உள்நாட்டு ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சர்வதேச கொள்வனவு செய்யவோர் மற்றும் முதலீட்டாளர்களுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு புதிய வர்த்தக வாய்ப்புகளைக் கண்டறிவதற்கு ஒரு முக்கிய தளமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
































