Nov 1, 2026 - 08:58 PM

வாழ்வாதாரச் செலவு உயர்வு மற்றும் அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிராக ஜெர்மனியில் இடம்பெற்ற போராட்டங்களின் போது வன்முறை வெடித்ததில், வர்த்தக நிலையங்கள் சூறையாடப்பட்டுள்ளதுடன் பொலிஸார் மீது தாக்குதல்களும் நடத்தப்பட்டுள்ளன.
ஜெர்மனியின் நிதி மையமான பிராங்பர்ட் (Frankfurt) உட்பட பெர்லின், கொலோன் மற்றும் ஹம்பர்க் ஆகிய முக்கிய நகரங்களில் இந்தக் கலவரங்கள் இடம்பெற்றுள்ளன.
"Gen Z regelt" (Gen Z பொறுப்பேற்கிறது) எனும் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தப் போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் அமைதியான முறையில் பங்கேற்றனர்.
பாடசாலைகளுக்கான நிதி ஒதுக்கீட்டைக் குறைத்தல், கட்டாய இராணுவச் சேவை, பொதுச் செலவினக் குறைப்பு மற்றும் வாழ்வாதாரச் செலவு உயர்வு ஆகியவற்றிற்கு எதிராகவும், சிறந்த கல்வி மற்றும் சுகாதார வசதிகளை வலியுறுத்தியும்
இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இருப்பினும், பிராங்பர்ட் நகரின் மையப்பகுதியில் போராட்டக்காரர்களுடன் ஊடுருவிய சில குழுவினர் கடைகளின் கண்ணாடிகளை உடைத்துச் சூறையாடியுள்ளனர்.
துப்பாக்கிக் கடையொன்றின் கண்ணாடி உடைக்கப்பட்டு ஆயுதங்கள் திருடப்பட்ட நிலையில், சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்த பொலிஸார் இரண்டு ஆயுதங்களை மீட்டுள்ளனர். அத்துடன் பொலிஸார் மற்றும் அவசரப் பிரிவினர் மீது மொலடோவ் (Molotov) எரிகுண்டுகள், கற்கள் மற்றும் போத்தல்கள் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதையடுத்து, கலவரக்காரர்களைக் கட்டுப்படுத்த பொலிஸார் தண்ணீர்த்தாரை பிரயோகம் நடத்தியதுடன், பிராங்பர்ட்டின் பிரதான வர்த்தக வீதியை மூடிப் பலரைக் கைது செய்தனர்.
இந்த சம்பவங்களில் பெர்லினில் 27 பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்ததுடன் 56 பேர் வரை தற்காலிகமாகக் கைது செய்யப்பட்டனர். ஹம்பர்க்கில் 120 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜெர்மனியில் இடம்பெற்ற இந்த போராட்டங்கள், பிரான்சில் நடைபெற்ற பாரிய போராட்டங்களைத் தொடர்ந்து இடம்பெற்றுள்ளன.
பிரான்சில் 320,000க்கும் மேற்பட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், துலூஸ், லியோன் மற்றும் மர்சேய் ஆகிய நகரங்களில் ஏற்பட்ட மோதல்களைத் தொடர்ந்து 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இதேவேளை, இத்தாலி, போர்த்துக்கல், பெல்ஜியம், அயர்லாந்து, ஸ்பெயின், கிரீஸ், செர்பியா மற்றும் அல்பேனியா ஆகிய ஐரோப்பிய நாடுகளிலும் வீடமைப்புச் சிக்கல்கள், கல்வித் தரம் மற்றும் வாழ்வாதாரச் செலவுகளுக்கு எதிராக இளைஞர்கள் வீதிக்களங்கிப் போராடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
































