Oct 30, 2026 - 09:20 PM

டித்வா சூறாவளி குறித்த காலநிலைக் கணிப்புகள் வெளியாகியிருந்தும், அதனால் ஏற்பட்ட சேங்களைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கத் தவறியதன் மூலம் அரசாங்கம் அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாகத் தீர்ப்பு வழங்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பான ஆட்சேபனைகளை பெப்ரவரி 12 ஆம் திகதி தாக்கல் செய்யுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கண்டிப் பகுதியைச் சேர்ந்த சட்டத்தரணியான கீர்த்தி பண்டார கிரிதெனிய என்பவரால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு இன்று (30) அழைக்கப்பட்டது.
பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன, அர்ஜுன ஒபேசேகர மற்றும் கிஹான் குலதுங்க உள்ளிட்ட மூவரடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு அழைக்கப்பட்டது.
இந்த மனு அழைக்கப்பட்ட போது, இந்த வழக்கு தொடர்பாகச் சட்ட மா அதிபரால் ஆரம்பகட்ட ஆட்சேபனைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அரச தரப்பு சட்டத்தரணி தெரிவித்தார்.
அதற்கமைய, ஆட்சேபனைகள் ஏதேனும் இருப்பின் அவற்றை பெப்ரவரி 12 ஆம் திகதி தாக்கல் செய்யுமாறு மனுதாரர் தரப்புக்கு நீதியரசர்கள் குழாம் உத்தரவிட்டது.
இந்த மனுவின் பிரதிவாதிகளாக ஜனாதிபதி உள்ளிட்ட அமைச்சரவை உறுப்பினர்கள், வளிமண்டலவியல் திணைக்களத்தின் அதிகாரிகள், மகாவலி அதிகாரசபை அதிகாரிகள், சட்ட மா அதிபர் உள்ளிட்டோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
































