Oct 30, 2026 - 03:53 PM
By மலையக நிருபர் சுந்தரலிங்கம்
By மலையக நிருபர் சுந்தரலிங்கம்

எதிர்வரும் தீபாவளி பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, கினிகத்தேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் கீழ் பணியாற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களால் இன்று (30) வட்டவளை நகரில் விசேட திடீர் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, வட்டவளை நகரில் அமைந்துள்ள உணவகங்கள், பலசரக்குக் கடைகள், மரக்கறி மற்றும் இறைச்சி விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு வர்த்தக நிலையங்கள், நுகர்வோரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டன.
இச்சோதனையின்போது, பல வர்த்தக நிலையங்களில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த காலாவதியான உணவுப் பொருட்கள் பெருமளவில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களால் கைப்பற்றப்பட்டதுடன், சம்பந்தப்பட்ட வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்றாமல், சுகாதாரமற்ற சூழலில் வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுத்த உணவகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களுக்குக் கடுமையான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் சுகாதாரத்திற்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் செயற்படும் வர்த்தகர்களுக்கு எதிராகத் தொடர்ந்து சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

































