Oct 30, 2026 - 10:16 AM

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கம்பீரை தங்கள் அணியின் பயிற்சியாளராக நியமிக்க நான்கு ஐபிஎல் அணிகள் ஆர்வம் காட்டி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணிகள் ஏற்கனவே கம்பீருடன் தொடர்பில் உள்ளன. மேலும், ஐபிஎல் கிண்ணத்தை வென்ற ஒரு அணியும், இதுவரை சாம்பியன் பட்டம் வெல்லாத மற்றொரு அணியும் அவரை அணுகியுள்ளதாகக் தெரிவிக்கப்படுகிறது.
கம்பீருக்கு ஐபிஎல் அணிகளிடையே இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைப்பதற்கு அவரது முந்தைய சாதனைகளே முக்கியக் காரணம். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தலைவராக 2012 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் ஐபிஎல் கிண்ணத்தை வென்ற அவர், 2024 ஆம் ஆண்டு அந்த அணியின் ஆலோசகராக மீண்டும் சாம்பியன் பட்டத்தை வெல்ல உதவினார். அதேபோல், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் ஆலோசகராகப் பணியாற்றியபோது 2022 மற்றும் 2023 ஆகிய இரண்டு சீசன்களிலும் அந்த அணி பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற உதவினார்.
தற்போது இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருக்கும் கம்பீரின் ஒப்பந்தம் 2027 ஒருநாள் உலகக் கிண்ணம் வரை உள்ளது. இந்திய அணியுடனான அவரது ஒப்பந்தம் 2028 வரை நீட்டிக்கப்படாவிட்டால், 2027 இற்கு பிறகு அவர் மீண்டும் ஐபிஎல் அணியின் பயிற்சியாளர் அல்லது ஆலோசகராகப் பொறுப்பேற்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக, கம்பீர் மீண்டும் கொல்கத்தா அணிக்குத் திரும்புவாரா அல்லது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் புதிய அத்தியாயத்தைத் தொடங்குவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இருப்பினும், எந்தவொரு அணியுடனும் அவர் ஒப்பந்தம் செய்துகொண்டதாக இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. 2027 உலகக் கிண்ணத்திற்கு பிறகு கம்பீரின் அடுத்தகட்ட முடிவு ஐபிஎல் வட்டாரத்தில் முக்கியமான நகர்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

































