Oct 28, 2026 - 11:27 PM

கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் இன்று (28) அழைக்கப்பட்ட தனக்கெதிரான வழக்கு தொடர்பில் சில ஊடக நிறுவனங்கள் வெளியிட்டுள்ள செய்திகள் முற்றிலும் உண்மையற்ற மற்றும் திரிபுபடுத்தப்பட்டதாகும் என முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
குறித்த ஊடக அறிக்கைகள் தொடர்பில் விசேட விளக்கமளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ள பிரதான விடயங்கள்:
குறித்த வழக்கில் தனக்கெதிராக மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் 3 குற்றச்சாட்டுகள் மட்டுமே சுமத்தப்பட்டுள்ளதாகவும், குறித்த மோட்டார் வாகனத்தை இலங்கைக்கு இறக்குமதி செய்தமை, அதன் உரிமையைக் கொண்டிருந்தமை அல்லது இறக்குமதி வரிகளைச் செலுத்தத் தவறியமை தொடர்பில் தனக்கெதிராக எவ்வித குற்றச்சாட்டுகளும் சுமத்தப்படவில்லை என்றும் அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சவாலுக்குட்பட்ட மோட்டார் வாகனத்தின் உரிமையாளர் தான் அல்லவென்றும், அந்த மோட்டார் வாகனத்தை வைத்திருந்த நபருக்கு எதிராக கம்பஹா நீதிவான் நீதிமன்றத்தில் தனியாக வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் வலியுறுத்துகிறார்.
மேலும், மோட்டார் வாகனமொன்றை வைத்திருப்பது தொடர்பான சட்ட ரீதியான விடயமும், வாகன இறக்குமதி வரி மோசடியும் முற்றிலும் வேறுபட்ட இரண்டு விடயங்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
எனவே, தான் வாகன இறக்குமதி வரி மோசடியில் ஈடுபட்டதாகவோ அல்லது அத்தகைய குற்றச்சாட்டிற்கு குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவோ வெளியாகும் செய்திகள் உண்மையற்றவை என அவர் தெரிவித்துள்ளார்.
































