Oct 28, 2026 - 03:32 PM

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற முன்னாள் இந்திய பாரா தடகள வீரர் நீரஜ் யாதவ் டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவரது மறைவை இந்திய பாரா - தட கள தலைமை பயிற்றுவிப்பாளர் எஸ். சத்யநாராயணா உறுதிப்படுத்தியுள்ளார்.
டெல்லியில் உள்ள ஜிடிபி வைத்தியசாலையில் நீரஜ் யாதவின் பிரேத பரிசோதனை நடைபெற்று வருகிறது. அங்கு சக பாரா தடகள வீரர்களான சுமித் அந்தில் மற்றும் விபின் கசானா ஆகியோர் சென்றுள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய பயிற்றுவிப்பாளர் சத்யநாராயணா, நீரஜ் யாதவின் மறைவு மிகுந்த வேதனையை அளிப்பதாகத் தெரிவித்தார்.
விளையாட்டு வீரர்கள் வாழ்வில் வரும் ஏற்ற இறக்கங்களை மன உறுதியுடன் எதிர்கொள்ள வேண்டும் என்றும், அவர் இத்தகைய முடிவை எடுத்தது துரதிர்ஷ்டவசமானது என்றும் அவர் கூறினார்.
F55 பிரிவில் போட்டியிட்டு வந்த நீரஜ் யாதவ், ஊக்கமருந்து சோதனையில் சிக்கியதால் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார்.
இதன் காரணமாக, நடப்பு மாதத் தொடக்கத்தில் ஐச்சி-நகோயாவில் நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் அவரால் பங்கேற்க முடியாமல் போனது. இதனால் அவர் கடும் மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், அவரது உயிரிழப்புக்கான காரணம் குறித்து இதுவரை முழுமையாக உறுதி செய்யப்படவில்லை.
இந்திய பாரா - தடகளத் துறையில் முக்கிய வீரராகத் திகழ்ந்த நீரஜ் யாதவ், ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் தனது விளையாட்டு வாழ்க்கையில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். 2018 ஆம் ஆண்டு ஜகார்த்தாவில் நடைபெற்ற போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார். தொடர்ந்து 2023 ஆம் ஆண்டு ஹாங்சோவில் நடைபெற்ற போட்டியில் ஈட்டி எறிதல் மற்றும் தட்டு எறிதல் ஆகிய இரண்டு பிரிவுகளிலுமே தங்கம் வென்றார்.
ஆனால், தேசிய ஊக்கமருந்து தடுப்பு ஆணையத்தின் அறிக்கை உலக ஊக்கமருந்து தடுப்பு ஆணையத்தை சென்றடைந்ததைத் தொடர்ந்து, ஆசிய பாராலிம்பிக் குழு 2023 ஹாங்சோ போட்டியில் அவர் வென்ற இரண்டு தங்கப் பதக்கங்களையும் திரும்பப் பெற்றது. மேலும், அந்தச் சாதனைக்காக அவருக்கு வழங்கப்பட வேண்டிய அரசின் ரொக்கப் பரிசும் மறுக்கப்பட்டது.
ஏழு வயதில் போலியோ பாதிப்புக்கு ஆளான நீரஜ் யாதவ், ஆரம்பத்தில் சக்கர நாற்காலி டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்று வந்தார். பின்னரே பாரா-தடகளப் போட்டிக்கு மாறினார். F55 பிரிவில் குண்டு எறிதல், தட்டு எறிதல் மற்றும் ஈட்டி எறிதல் போன்ற அமர்ந்த நிலையில் போட்டியிடும் நிகழ்வுகளில் சர்வதேச அளவில் பங்கேற்று வந்தார். தற்போது அவரது மறைவு குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

































