Oct 28, 2026 - 09:48 AM

ஹோமாகம பொலிஸ் பிரிவில் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த 29 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், அதற்குப் பொறுப்பான பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக முறையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி அவரது குடும்பத்தினர் பொலிஸ் தலைமையகத்தில் உத்தியோகபூர்வ முறைப்பாடு ஒன்றைச் செய்துள்ளனர்.
தனது கணவரின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதையும், இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராகத் தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்பதையும் வலியுறுத்தியே இந்த முறைப்பாட்டைச் சமர்ப்பித்ததாக உயிரிழந்தவரின் மனைவி தெரிவித்துள்ளார்.
அத்துடன், இச்சம்பவம் தொடர்பில் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை எனச் சுட்டிக்காட்டியுள்ள அவர், நடுநிலையான விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
கிரிவத்துடுவ பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 29 வயதுடைய இஷார ஹர்ஷ குமார என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டின் கீழ் ஹோமாகம பொலிஸாரால் கைது செய்யப்பட்ட அவர், பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த வேளையில் பொலிஸ் அதிகாரிகளால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளதாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
உறவினர்களின் பலத்த கோரிக்கையைத் தொடர்ந்து, உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகக் கூறி பொலிஸாரால் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த இளைஞர், சிகிச்சை பலனின்றி பின்னர் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு, தொடர்புடைய அதிகாரிகளுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவரது குடும்பத்தினர் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றனர்.

































