Oct 27, 2026 - 04:01 PM

அபர்டீன் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் (Aberdeen Holdings (Pvt) Ltd) நிறுவனம், நெஷனல் கிளீனர் புரொடக்ஷன் செண்டரிடமிருந்து (National Cleaner Production Centre – NCPC) கார்பன் நடுநிலைச் சான்றிதழைப் (Carbon Neutral Certification) பெற்றுள்ளது. குழுமத்தின் நிலைத்தன்மைப் பயணத்தில் குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைந்துள்ள இச்சாதனை, சமூகத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் பொறுப்புடன் பெறுமதியை உருவாக்கும் வணிகங்களைக் கட்டியெழுப்புவதற்கான அதன் உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
1995ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட அபர்டீன் ஹோல்டிங்ஸ், மூன்று தசாப்தங்களுக்கும் மேலாகப் பல்வேறு துறைகளிலும் சந்தைகளிலும் தனது வர்த்தக நடவடிக்கைகளை விரிவுபடுத்தி, இன்று இலங்கையின் பல்துறை வர்த்தகக் குழுமங்களில் ஒன்றாக வளர்ச்சியடைந்துள்ளது. ஐந்து முக்கிய துறைகளில் 17இற்கும் மேற்பட்ட நிறுவனங்களின் ஊடாகச் செயற்பட்டு வரும் இக்குழுமத்தில் 1,800இற்கும் அதிகமானோர் பணியாற்றுகின்றனர்.
இத்தகைய நீண்ட வளர்ச்சிப் பயணத்தைக் கொண்ட குழுமத்திற்கு, இந்தச் சான்றிதழ் வெறுமனே ஒரு சுற்றுச்சூழல் சாதனை மட்டுமல்ல. எதிர்கால வளர்ச்சிப் பாதையில் சுற்றுச்சூழல் பொறுப்புணர்வை மேலும் வலுப்படுத்துதல், வளங்களை மிகவும் திறமையாகப் பயன்படுத்துதல் மற்றும் பொறுப்பான வர்த்தக நடைமுறைகளைப் பின்பற்றுதல் ஆகியவற்றை உறுதிசெய்யும் நோக்கில் குழுமம் மேற்கொண்டுள்ள திட்டமிட்ட நகர்வின் வெளிப்பாடாகவும் இது அமைந்துள்ளது. இனிவரும் காலங்களில் தனது வணிக விரிவாக்கத்திற்கு மட்டுமன்றி, அந்த வளர்ச்சி எந்த வழிமுறையில் அடையப்படுகிறது என்பதற்கும் அபர்டீன் அதிக முக்கியத்துவம் அளித்து வருவதே இதற்குக் காரணமாகும்.
இந்த அணுகுமுறையின் ஓர் அங்கமாக, கார்பன் நடுநிலைச் சான்றிதழைப் பெறுவதற்கான செயல்முறையின்போது அபர்டீன் ஹோல்டிங்ஸின் ஒட்டுமொத்த பசுமைக்குடில் வாயு வெளியேற்றம் மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த நடைமுறைகள் விரிவாக மதிப்பீடு செய்யப்பட்டன. எரிசக்தி மற்றும் நீர்ப் பயன்பாடு, போக்குவரத்து, கழிவு முகாமைத்துவம் உள்ளிட்ட நிறுவனத்தின் பல்வேறு செயற்பாடுகள் இம்மதிப்பீட்டில் கருத்திற்கொள்ளப்பட்டன. இதன் மூலம், தனது வர்த்தகச் செயற்பாடுகள் சுற்றுச்சூழலில் ஏற்படுத்தும் தாக்கத்தைத் தரவுகளின் அடிப்படையில் நுணுக்கமாக ஆராய்வதற்கான வாய்ப்பு அபர்டீன் குழுமத்திற்குக் கிடைத்தது. அதனடிப்படையில், கார்பன் நடுநிலையை அடைவதற்குத் தேவையான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன.
இந்த மைல்கல்லை அடைவதில், கோ-எனர்ஜி (பிரைவேட்) லிமிடெட் (Co-Energi (Pvt) Ltd) நிறுவனம் ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்கி முக்கிய பங்காற்றியது. அதே வேளை, மதிப்பீடு மற்றும் சான்றிதழ் வழங்கும் செயல்முறையை NCPC முன்னெடுத்தது.
அபர்டீன் ஹோல்டிங்ஸைப் பொறுத்தவரையில், நிலைத்தன்மை என்ற கொள்கையைக் குழுமம் முழுவதும் வர்த்தகத் தீர்மானங்களிலும் அன்றாடச் செயற்பாடுகளிலும் மேலும் ஆழமாக உள்வாங்குவதற்கான புதிய அணுகுமுறையின் தொடக்கமாக இச்சாதனை அமைந்துள்ளது.
இது குறித்து அபர்டீன் ஹோல்டிங்ஸ் குழுமப் பணிப்பாளர் திரு. அப்துல்லா காசிம் தெரிவிக்கையில், “இந்தச் சான்றிதழைப் பெற்றிருப்பது அபர்டீன் ஹோல்டிங்ஸின் பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லாகும். எமது வர்த்தக நடவடிக்கைகள் சுற்றுச்சூழலின் மீது ஏற்படுத்தும் தாக்கத்தைத் தெளிவாகப் புரிந்துகொண்டு, அதனைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், குழுமம் முழுவதும் பொறுப்பான செயற்பாடுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான எமது அர்ப்பணிப்பையும் இது வெளிப்படுத்துகிறது. இதனை நாம் ஒரு நிறைவாகக் கருதவில்லை; மாறாக, தொடர்ச்சியான செயற்பாடுகளுக்கான வலுவான அடித்தளமாகவே கருதுகிறோம்” என்றார்.
பல்வேறு துறைகளில் வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் அபர்டீன் ஹோல்டிங்ஸ், நிலையான வளர்ச்சியின் அடுத்த கட்டத்தில் வளர்ச்சி இலக்குகளையும் பொறுப்புணர்வையும் சமநிலைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்ந்துள்ளது. பொருளாதார ரீதியில் பெறுமதியை உருவாக்கும் அதே வேளை, தனது செயற்பாடுகள் சுற்றுச்சூழலுக்கும் சமூகத்திற்கும் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்களையும் கருத்திற்கொண்டு செயற்படுவதே குழுமத்தின் நோக்கமாகும். இதன் பின்னணியிலேயே, இந்தக் கார்பன் நடுநிலைச் சான்றிதழை ஒரு பயணத்தின் முடிவாக அல்லாமல், பொறுப்பான வளர்ச்சிப் பாதையின் புதிய தொடக்கமாக அபர்டீன் ஹோல்டிங்ஸ் கருதுகிறது.
அந்த வகையில், இனிவரும் காலங்களில் தனது வர்த்தகச் செயற்பாடுகளின் சுற்றுச்சூழல் தாக்கத்தைத் தொடர்ந்து மதிப்பீடு செய்வதுடன், வளங்களை மேலும் திறம்படப் பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் அபர்டீன் ஹோல்டிங்ஸ் மேற்கொள்ளவுள்ளது. அத்துடன், குழுமத்தின் அனைத்து நிறுவனங்களிலும் பொறுப்பான வர்த்தக நடைமுறைகளை வலுப்படுத்தி, நிலைத்தன்மை அன்றாடப் பணிச்செயற்பாடுகளின் இயல்பான அங்கமாக மாறும் வகையிலான நிறுவனக் கலாசாரத்தையும் குழுமம் ஊக்குவிக்கவுள்ளது.
தனது வர்த்தகப் பயணத்தின் அடுத்த அத்தியாயத்திற்குள் காலடி எடுத்து வைக்கும் அபர்டீன் ஹோல்டிங்ஸ், கடந்த மூன்று தசாப்தங்களில் கட்டியெழுப்பிய சாதனைகளை மேலும் வலுப்படுத்தும் உறுதியுடன் பயணிக்கிறது. பொறுப்புடன் வளர்வது, சுற்றுச்சூழல் மற்றும் சமூகப் பொறுப்புணர்வுடன் செயற்படுவது, எதிர்காலத் தலைமுறைகளுக்கும் நிலைத்திருக்கும் பெறுமதியை உருவாக்குவது என்பவையே குழுமத்தின் தெளிவான இலக்குகளாகும்.
































