Oct 27, 2026 - 02:19 PM

நம்பகமான மற்றும் பாதுகாப்பான அமெரிக்கத் தொழில்நுட்பமானது, கடல்சார் வர்த்தகத்தினை எவ்வாறு மாற்றியமைக்க முடியும் என்பதை எடுத்துக்காட்டும் வகையில், அமெரிக்கத் தூதரகம் ஏற்பாடுசெய்த பிராந்திய அளவிலான செயலமர்வொன்றில் பங்குபற்றிய இலங்கை, பங்களாதேஷ், இந்தியா மற்றும் மாலைத்தீவு ஆகிவற்றைச் சேர்ந்த துறைமுகப் பங்குதாரர்கள் மத்தியில் அமெரிக்கத் தூதுவர் எரிக் மயர் இன்று (27) உரையாற்றினார்.
பிராந்திய அளவிலான துறைமுகம் சம்பந்தப்பட்ட முடிவுகளை மேற்கொள்பவர்களையும், 11 அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்களையும் ஒன்றிணைக்கும் இச்செயலமர்வானது, இந்து சமுத்திரம் முழுவதும் அமெரிக்க வணிகங்களுக்குப் புதிய வர்த்தக வாய்ப்புகளை உருவாக்கும் அதேவேளை, துறைமுக நடவடிக்கைகளை நெறிப்படுத்துவதற்கும், சரக்குகளை விரைவாக நகர்த்துவதற்கும், கப்பல் போக்குவரத்துச் செலவுகளைக் குறைப்பதற்கும், விநியோகச் சங்கிலிகளை பலப்படுத்துவதற்கும் உதவி செய்யக்கூடிய அமெரிக்கப்
புத்தாக்கங்களை அடிக்கோடிட்டுக்காட்டுகிறது.
இதன் ஆரம்ப நிகழ்வில், இலங்கையின் துறைமுக மற்றும் சிவில் விமானப் போக்குவரத்துப் பிரதியமைச்சர் ஜனித்த கொடித்துவக்கு மற்றும் இலங்கை துறைமுக அதிகாரசபையின் தலைவர் கலாநிதி பராக்ரம திசாநாயக்க ஆகியோரும் தூதுவருடன் இணைந்து கொண்டனர்.
கொழும்புத் துறைமுகத்தை நவீனமயப்படுத்துவதற்காக 17 மில்லியன் டொலர் மானியம் வழங்குவதாக அமெரிக்கா அண்மையில் மேற்கொண்ட அறிவிப்பின் அடிப்படையில், Advancing Maritime Single Windows and Port Community Systems எனும் இந்த இரண்டரை நாள் செயலமர்வானது, நவீன துறைமுகங்களின் செயற்பாட்டினைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் டிஜிட்டல் உட்கட்டமைப்புகள் மீது கவனம் செலுத்துகிறது.
ஒன்றுடனொன்று இணைந்த இரண்டு கட்டமைப்புகளை விருத்தி செய்வதற்கு இந்த அமெரிக்க மானியம் உதவி
செய்யும் - கப்பல்கள் அவற்றின் வருகை, புறப்பாடு மற்றும் ஒழுங்காக்கல் தகவல்களை ஒரே டிஜிட்டல் தளத்தினூடாக சமர்ப்பிப்பதற்கு அனுமதிக்கும் வகையிலான ஒரு கடல்சார் ஒற்றைச் சாளரம் (MSW), மற்றும் சரக்கு மற்றும் தளவாடத் தகவல்களை நிகழ்நேரத்தில்
பரிமாறிக்கொள்ளவதற்காக, கப்பல் நிறுவனங்கள், துறைமுக நடவடிக்கைகளை மேற்கொள்பவர்கள், சுங்கம், குடிவரவு மற்றும் வணிகங்கள் ஆகியவற்றை இணைக்கும் ஒரு துறைமுக சமூக கட்டமைப்பு (PCS).
இவ்விரண்டு கட்டமைப்புகளும் ஒன்றிணைந்து, சரக்குகளுக்கு முன்பாக அவை தொடர்பான தகவல்கள் சென்றடைவதற்கும், ஒப்புதல்கள் வழங்கப்படுவதை விரைவுபடுத்தி, செலவுமிக்க தாமதங்களைக் குறைப்பதற்கும் உதவி செய்யும் வகையில், சிதறிக் கிடக்கும் ஆவணப்பணிகளையும், செயன்முறையாக்கங்களையும், மிகவும் வினைத்திறனான, ஒன்றிணைக்கப்பட்ட வலையமைப்பினைக் கொண்டு பதிலீடு செய்யும்.
“அமெரிக்க வணிகங்களை தெற்காசியாவிலும், அதற்கு அப்பாலும் உள்ள சந்தைகளுடன் இணைக்கும் கொழும்புத் துறைமுகமானது உலகளாவிய வர்த்தகத்திற்கான ஒரு பிரதான நுழைவாயிலாகத் தனது இடத்தைப் பெற்றுள்ளது.” என அமெரிக்கத் தூதுவர் எரிக் மயர் தெரிவித்தார்.
“அந்தக் கதையின் அடுத்த அத்தியாயத்தை எழுதுவதற்கு அமெரிக்கப் புத்தாக்கம் உதவி செய்யலாம். துறைமுகங்கள் திறனாகச் செயற்படும்போது, கப்பல்களின் காத்திருக்கும் நேரம் குறைகிறது, பொருட்களைக் கொண்டு செல்வதற்காக வணிகங்கள் குறைந்த தொகை பணத்தினை செலவிடுகின்றன, இதனால் அதிக நம்பகத்தன்மையுடைய வர்த்தகத்தினால் குடும்பங்கள் பயனடைகின்றன. எமது பொருளாதாரங்கள் தங்கியிருக்கும் விநியோகச் சங்கிலிகளை பலப்படுத்துவதற்கும், இந்து சமுத்திரப் பிராந்தியத்திலுள்ள அமெரிக்க
வணிகங்களுக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்குவதற்கும், உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பங்களையும், நிபுணத்துவத்தையும் கொண்டு வந்து, இந்த மாற்றத்தின் முன்னணியில் அமெரிக்க நிறுவனங்கள் இருக்க வேண்டுமென நாங்கள் விரும்புகிறோம்.” என அவர் மேலும் தெரிவித்தார்.
“கொழும்பிற்கு வருகை தரும் ஒவ்வொரு கப்பலுக்குப் பின்னாலும், உலக வர்த்தகத்தைத் தொடர்ந்து இயங்க வைக்கும் மனிதர்கள், வணிகங்கள் மற்றும் பல கட்டமைப்புகளின் ஒரு வலைப்பின்னல் உள்ளது.” என இலங்கையின் துறைமுக மற்றும் சிவில் விமானப் போக்குவரத்துப் பிரதியமைச்சர் ஜனித்த கொடித்துவக்கு கூறினார்.
“எமது துறைமுகங்கள் தொழிற்படும் விதத்தையும், தகவல்கள் பரிமாறப்படும் விதத்தையும் மேம்படுத்துவதன் மூலம், காலதாமதங்களைக் குறைப்பதற்கும், இலங்கை ஏற்றுமதியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களுக்கான செலவுகளைக் குறைப்பதற்கும், சர்வதேச சந்தைகளில் எமது வணிகங்களை அதிக போட்டித்தன்மை கொண்டவையாக மாற்றுவதற்கும் முடியும்.
அமெரிக்காவுடனான எமது பங்காண்மையானது, இம்முயற்சிகளுக்குப் பெறுமதிமிக்க தொழில்நுட்பங்களையும், நிபுணத்துவத்தையும் எடுத்து வருகிறது. அது பிராந்தியத்தின் வர்த்தக கேந்திர நிலையமொன்றாக கொழும்பின் பங்கினையும், இலங்கையை உலகுடன் இணைக்கும் விநியோகச் சங்கிலிகளையும் பலப்படுத்துகிறது.” என அவர் மேலும் தெரிவித்தார்.
“கொழும்புத் துறைமுகத்தின் எதிர்காலப் போட்டித்திறன், நாம் எவ்வளவு உட்கட்டமைப்பு வசதிகளை கட்டியெழுப்புகிறோம் என்பதில் மட்டுமன்றி, நம்மிடம் ஏற்கனவே இருக்கும் உட்கட்டமைப்பு வசதிகளை எவ்வளவு வினைத்திறனுடன் பயன்படுத்துகிறோம் என்பதிலும் தங்கியுள்ளது. PCS மற்றும் MSW ஆகிய இந்த இரண்டு டிஜிட்டல் கட்டமைப்புகளும், அதைத் துல்லியமாக அடைவதற்கு எமக்கு உதவி செய்யும்.” என இலங்கை துறைமுக அதிகாரசபையின் தலைவர் கலாநிதி பராக்ரம திசாநாயக்க கூறினார்.
துறைமுக முகாமைத்துவம், சரக்குகளின் தடமறிதல், இணையப் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பான தரவுப் பரிமாற்றம் ஆகியவற்றில் அமெரிக்காவின் தீர்வுகளைக் காட்சிப்படுத்தும் வகையில் இச்செயலமர்வில், CargoSprint (Advent eModal), Cavotec USA, Concentric Industries, ESGPlus, Kale Info Solutions USA, Kaleris, Kavi Global, OptiRiver USA, OSI Systems/Rapiscan Systems, SANS Institute, மற்றும் Varex, போன்ற பதினொரு அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்கள் கலந்துகொள்கின்றன.
அமெரிக்க வர்த்தகத் திணைக்களம், அமெரிக்க கடலோர காவற்படை, மற்றும் அமெரிக்க சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு ஆகியவற்றைச் சேர்ந்த நிபுணர்கள், நவீன துறைமுக நடவடிக்கைகள், வர்த்தகத்தினை எளிதாக்குதல் மற்றும் பாதுகாப்பு போன்ற விடயங்கள் தொடர்பான தமது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வர்.
இச்செயலமர்வானது, இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் துறைமுகங்களை மிகவும் வினைத்திறனான, பாதுகாப்பான மற்றும் டிஜிட்டல் முறையில் இணைக்கப்பட்டவையாக மாற்றுவதற்கு உதவிசெய்யும் ஒரு முன்முயற்சியான, Quad Ports of the Future Partnership முன்முயற்சியின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டதாகும்.

































