Oct 25, 2026 - 03:26 PM

ஹபராதுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்கல பகுதியில் உள்ள புகையிரதக் கடவையில் பஸ் ஒன்று புகையிரதத்துடன் மோதி இன்று (25) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த சிறுவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுவர்கள் சிகிச்சைக்காக கராப்பிட்டிய மற்றும் உனவட்டுன வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெலியத்தையில் இருந்து மருதானை நோக்கிப் பயணித்த புகையிரதத்தில் குறித்த பஸ்ஸின் பின்பகுதி மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
மேலதிக வகுப்பு ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருடன் இந்த சிறுவர்கள் கொட்டாவ பகுதியிலிருந்து கொக்கலையில் அமைந்துள்ள மார்ட்டின் விக்கிரமசிங்க நினைவு அருங்காட்சியகத்தைப் பார்வையிடச் சென்று திரும்பிக்கொண்டிருந்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் மேலதிக வகுப்பு ஆசிரியர்கள் 14 பேர், பெற்றோர்கள் 6 பேர் மற்றும் சிறுவர்கள் 41 பேர் வரை பஸ்ஸில் இருந்ததாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பஸ்ஸில் இருந்த சிறுவர்கள் 14 மற்றும் 15 வயதுடையவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்து நடந்த புகையிரதக் கடவையில் பாதுகாப்பு கடவை (Gate) இல்லாததுடன், மின்சார விளக்கு சமிக்ஞை மற்றும் ஒலிச் சமிக்ஞை மூலமாக மட்டுமே இயங்கும் ஒரு இடம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த விபத்து தொடர்பில் 40 வயதுடைய பஸ் சாரதியும் 21 வயதுடைய நடத்துனரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹபராதுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
































