Oct 25, 2026 - 06:54 AM
By கிளிநொச்சி நிருபர் சப்தன்
By கிளிநொச்சி நிருபர் சப்தன்

தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து கடல் வழியாக இலங்கைக்குக் கடத்த முயன்ற இரு வேறு சம்பவங்களில், 2 லட்சம் வலி நிவாரணி மாத்திரைகள், 531 கிலோ சுக்கு (காய்ந்த இஞ்சி) மற்றும் 1,500 மஞ்சள் தூள் பக்கெட்டுகளை இந்திய மரைன் மற்றும் 'க்யூ' பிரிவு பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தை அடுத்த வேதாளை கிராம ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே நேற்று அதிகாலை 'க்யூ' பிரிவு பொலிசாருக்குக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தீவிர கண்காணிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டது.
அப்போது, இலங்கைக்குப் படகு மூலம் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வலி நிவாரணி மாத்திரைகள் அடங்கிய 5 மூட்டைகளை பொலிஸார் கண்டறிந்தனர். ஒவ்வொரு மூட்டையிலும் தலா 40,000 மாத்திரைகள் வீதம் மொத்தம் 2 லட்சம் மாத்திரைகள் இருந்தன.
பொலிசாரைக் கண்டதும், அங்கிருந்த நபர்கள் தங்களது இருசக்கர வாகனத்தை விட்டுவிட்டுத் தப்பியோடினர். இதையடுத்து, மாத்திரைகள் அடங்கிய 5 மூட்டைகளையும் இருசக்கர வாகனத்தையும் பொலிசார் பறிமுதல் செய்தனர்.
தப்பியோடிய நபர்களை 'க்யூ' பிரிவு பொலிசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட வலி நிவாரணி மாத்திரைகளின் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் ₹3 கோடி இருக்கும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதேபோல், ராமநாதபுரம் மாவட்டம் புதுமடம் கடற்கரைப் பகுதியில் இலங்கைக்குக் கடத்துவதற்காகப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், மரைன் காவல் ஆய்வாளர் ஜான்சிராணி தலைமையில் பொலிசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது, பதிவு செய்யப்படாத விசைப்படகு ஒன்றில் ஏற்றப்பட்டிருந்த 18 சாக்கு மூட்டைகளில் 531 கிலோ சுக்கும், 4 சாக்கு மூட்டைகளில் 1,500 மஞ்சள் தூள் பக்கெட்டுகளும் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் மற்றும் எஞ்சினுடன் கூடிய படகையும் பொலிசார் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் படகைச் சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரே நாளில் வேதாளை மற்றும் புதுமடம் கடலோரப் பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற அதிரடி நடவடிக்கைகளில், இலங்கைக்குக் கடத்த முயன்ற பெருமளவிலான வலி நிவாரணி மாத்திரைகள், சுக்கு மற்றும் மஞ்சள் பக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
































