Oct 2, 2026 - 01:44 PM

காத்தான்குடி பாலமுனைக் கடலில் சட்டவிரோதமான சுருக்கு வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுவதற்காக வீசப்பட்டிருந்த, 50 லட்சம் ரூபாய் பெறுமதியான 5 சுருக்கு வலைகளைக் கடற்படையினர் மீட்டு, மட்டக்களப்பு மாவட்டக் கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்திடம் நேற்று (01) ஒப்படைத்துள்ளனர்.
கல்லடி கடற்படை புலனாய்வுப் பிரிவுப் பொறுப்பதிகாரிக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, கடற்படையினர் சம்பவ தினமான புதன்கிழமை இரவு கடலில் சோதனையில் ஈடுபட்டனர். இதன்போது, காத்தான்குடி பாலமுனைக் கடலில் வீசப்பட்டிருந்த உரிமைகோராத, 50 லட்சம் ரூபாய் பெறுமதியான 5 சட்டவிரோதச் சுருக்கு வலைகளைக் கண்டறிந்து மீட்டனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட சட்டவிரோதச் சுருக்கு வலைகள் மட்டக்களப்பு மாவட்டக் கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்திடம் கடற்படையினரால் ஒப்படைக்கப்பட்டன.
இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் களுவாஞ்சிகுடி, காத்தான்குடி, பாலமுனை, தேற்றாத்தீவு, செட்டிபாளையம், களுதாவளை, களுவங்கேணி உட்பட பல பிரதேசங்களில் 50 இற்கும் மேற்பட்டோர் சட்டவிரோதச் சுருக்கு வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டு வருவதாக மீனவர் சங்கங்களும் மீனவர்களும் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.































