Sep 29, 2026 - 02:01 PM

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு மஸ்கெலியா - நல்லதண்ணி, மோகினி எல்ல, காட்மோர் மற்றும் மறே ஆகிய பகுதிகள் புதிய சுற்றுலாப் பிரதேசங்களாக இன்று (29) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.
மத்திய மாகாணத்தின் 46 ஆவது சுற்றுலாத்துறை மேம்பாட்டு வேலைத்திட்டத்தின் கீழ், மத்திய மாகாண வர்த்தக, வாணிப மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்வின் ஆரம்ப அம்சமாக மஸ்கெலியா ஸ்ரீ சமன் தேவாலயத்தில் விசேட பூஜைகள் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து மத்திய மாகாண ஆளுநர், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொலிஸார் இணைந்து மிதிவண்டிப் பேரணியை ஆரம்பித்து வைத்தனர். பின்னர், ஹட்டன் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான விசேட சுற்றுலா பேருந்தில் பாடல்களைப் பாடியவாறு பிரதம அதிதிகள் விழா நடைபெற்ற இடத்திற்கு வருகை தந்தனர்.
நல்லதண்ணி மற்றும் மோகினி நீர்வீழ்ச்சிப் பகுதிகளில் சோலார் படகுச் சவாரிகள் முன்னெடுக்கப்பட்டதோடு, காட்மோர் மற்றும் மறே நீர்வீழ்ச்சிகளை மையப்படுத்திய சுற்றுலா அம்சங்களும் அறிமுகப்படுத்தப்பட்டன. இதனிடையே, சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் மவுசாக்கலை நீர்த்தேக்கப் பகுதியில் தொங்கு பாலம் உள்ளிட்ட புதிய வசதிகளை அமைப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கைகளும் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் மத்திய மாகாண ஆளுநர் டொக்டர் ஹர்ஷ சுரங்க பெர்னாண்டோ, நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான மஞ்சுள சுரவீர ஆராச்சி, கிருஷ்ணன் கலைச்செல்வி, நுவரெலியா மாவட்டச் செயலாளர் துஷாரி தென்னக்கோன், மத்திய மாகாணக் கல்விச் செயலாளர், மஸ்கெலியா, நோர்வூட் மற்றும் அம்பகமுவை பிரதேச சபைகளின் தலைவர்கள், ஹட்டன் - டிக்கோயா நகரசபைத் தலைவர், பிரதேச சபை உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இன்று, நாளை (30) நடைபெறவுள்ள இவ்விழாவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றதோடு, ஏராளமான வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.































