Sep 20, 2026 - 09:46 AM

கொட்டாஞ்சேனை பகுதியில் இடம்பெற்ற மனிதக்கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்கள் இருவர் உட்பட அதற்கு உடந்தையாக இருந்த மற்றொருவர் 'ஐஸ்' போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த செப்டம்பர் 14ஆம் திகதி கொட்டாஞ்சேனை பகுதியில் நபரொருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.
இதன்போது கிடைத்த தகவலுக்கு அமைய கிரேன்ட்பாஸ், கொலன்னாவை மற்றும் மட்டக்குளி ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போதே இம்மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து 28 கிராம் 600 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மட்டக்குளி, கொழும்பு 14 மற்றும் கொலன்னாவை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 19, 25 மற்றும் 39 வயதுடையவர்கள் ஆவர்.
குற்றச் செயலுக்குப் பயன்படுத்தப்பட்ட மன்னாக் கத்தியொன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் கொட்டாஞ்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





























