Sep 19, 2026 - 09:14 PM

அரசாங்கத்தின் ஊழல் ஒழிப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்குத் தாம் முழுமையான ஆதரவை வழங்குவதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்:
"நாட்டிற்கு எதிராகச் செயல்படுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
என் மீது சுமத்தப்பட்ட பொய்க் குற்றச்சாட்டுகளை நிரூபிக்குமாறு சாமர சம்பத் அவர்களுக்கு பாராளுமன்றத்தில் சவால் விடுத்திருந்தேன். ஆனால், இதுவரை அவர்களால் எந்தவொரு குற்றச்சாட்டையும் நிரூபிக்க முடியவில்லை. ஊழல் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு, நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக அரசாங்கம் எடுக்கும் நேர்மறையான நடவடிக்கைகளுக்கு இலங்கைத் தமிழரசுத் கட்சி தொடர்ந்து ஆதரவளிக்கும். போதைப்பொருள் மற்றும் மதுப் பயன்பாட்டினால் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் வாழும் தமிழ் இளைஞர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், வன்முறைகளும் அதிகரித்துள்ளன. எனவே, போதைப்பொருள் ஒழிப்புக்கும் மதுபானசாலைகளை மூடும் நடவடிக்கைகளுக்கும் நாங்கள் முழு ஒத்துழைப்பு வழங்குவோம். மேலும், இந்த ஆண்டில் மாகாண சபைத் தேர்தல் நடைபெற வாய்ப்பில்லை. அடுத்த ஆண்டு அதற்கான அறிவிப்பு வரும்போதே முதலமைச்சர் வேட்பாளர் குறித்த முடிவுகள் பரிசீலிக்கப்படும்" என்று தெரிவித்தார்.





























