Jul 15, 2026 - 05:03 PM
கட்டுநாயக்க, தேவமொட்டாவ பகுதியில் இன்று (15) பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்து நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர், அந்த பொலிஸ் அதிகாரியின் கடமைநேர துப்பாக்கியைப் பறித்து இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பியோடியுள்ளதாகப் தெரிவிக்கப்படுகின்றது.
கிடைக்கப்பெற்ற தகவலின் பேரில் செயற்பட்ட இரு பொலிஸ் அதிகாரிகள், மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரைப் பின்தொடர்ந்து சென்றுள்ளனர்.
இதன்போது தேவமொட்டாவ பகுதியில் வைத்து சந்தேகநபரை நிறுத்தி விசாரணை செய்த பின்னர், அவரைப் பொலிஸ் அதிகாரிகள் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சந்தேகநபரைப் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்வதற்குத் தயாராகிக் கொண்டிருந்த போது, ஒரு பொலிஸ் அதிகாரி சந்தேகநபர் வந்த மோட்டார் சைக்கிளை எடுத்து வருவதற்காகச் சென்றுள்ளார்.
அவ்வேளையில், மற்றைய அதிகாரியுடன் இருந்த சந்தேகநபர், உடனடியாகச் செயற்பட்டு அந்த அதிகாரியிடம் இருந்த கடமைநேர துப்பாக்கியைப் பறித்து, அவர் மீது துப்பாக்கிச் பிரயோகம் மேற்கொண்டுவிட்டு வேறொரு மோட்டார் சைக்கிளில் தப்பியோடியுள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.





























