Nov 29, 2026 - 11:15 AM

பவன் சதினேனி இயக்கத்தில், துல்கர் சல்மான், சாத்விகா வீரவல்லி, ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான தெலுங்குத் திரைப்படமான ‘ஆகாசம்லோ ஒக தாரா’ (Aakasamlo Oka Tara), ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே பெரும் பாராட்டைப் பெற்று வருகிறது.
இந்நிலையில், இத்திரைப்படத்தைப் பார்த்து உணர்ச்சிவசப்பட்டு அழுத பிரபல இயக்குனர் சுகுமார், படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான அல்லு அரவிந்த்திற்கு ஒரு இலட்சம் ரூபாய் காசோலையை வழங்கியுள்ளார்.
‘ரங்கஸ்தலம்’, ‘புஷ்பா 2’ உள்ளிட்ட மாபெரும் வெற்றிப் படங்களை இயக்கிய சுகுமார், தற்போது ராம் சரண் நடிக்கும் புதிய படத்தின் பணிகளில் ஈடுபட்டுள்ளார். இதனிடையே, அல்லு அரவிந்த்திற்குத் தாம் ஒரு இலட்சம் ரூபாய் வழங்கியதன் சுவாரசியப் பின்னணியை சுகுமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அப்பதிவில், “நேற்று அரவிந்த் சார் என்னைத் தொலைபேசியில் அழைத்து ஒரு சுவாரசியமான சவால் விடுத்தார். ‘சுகுமார், நீ சென்று ‘ஏஒடி’ (AOT) படத்தைப் பார். படம் பார்த்துவிட்டு நீ அழாமல் வெளியே வந்தால் நான் உனக்கு ஒரு கோடி ரூபாய் தருகிறேன்.ஒருவேளை அழுதுவிட்டால் நீ எனக்கு ஒரு இலட்சம் ரூபாய் தர வேண்டும்’ எனக் கூறினார்.
இது எவ்வளவு செலவு மிக்க சிபாரிசு சார்!” எனக் குறிப்பிட்டுள்ள சுகுமார், தாம் வழங்கிய ஒரு இலட்சம் ரூபாய் காசோலையின் (Cheque) புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.
திரைப்படத்தைப் பார்த்துவிட்டு அழுதபடியே வெளியே வந்ததன் மூலம், அல்லு அரவிந்த் விடுத்த சவாலில் தோல்வியடைந்த சுகுமார், உடனடியாகத் தனது வாக்குறுதியை நிறைவேற்றியுள்ள சம்பவம் தெலுங்குத் திரையுலகில் வைரலாகி வருகிறது.

































