Nov 29, 2026 - 09:35 AM

இஸ்ரேலில் சுழற்சி முறையிலான தேசிய நல்லிணக்க அரசாங்கத்தை அமைப்பதற்கு, எதிர்க்கட்சித் தலைவர் காடி ஐசன்கோட் (Gadi Eisenkot) முதலில் பிரதமராகப் பதவியேற்கத் தாம் சம்மதிப்பதாக இஸ்ரேலின் காபந்து பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) அறிவித்துள்ளார்.
நேற்று (சனிக்கிழமை) தனது சமூக வலைத்தளப் பதிவொன்றில் இதனைத் தெரிவித்துள்ள நெதன்யாகு, "ஒரு தலைவராக எனது பொறுப்பு, பெரிய கட்சி என்ற கொள்கை உட்பட அனைத்தையும் ஒதுக்கி வைக்க என்னைக் கட்டாயப்படுத்துகிறது" எனக் குறிப்பிட்டுள்ளதுடன், ஆரம்பத்தில் தாம் 'மாற்றுப் பிரதமராக' பணியாற்றத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் எதிர்நோக்கும் பாரிய அச்சுறுத்தல்களையும், அதனை எதிர்கொள்ளும் திறனற்ற ஒரு அரசாங்கம் உருவாவதற்கான சாத்தியக்கூறுகளையும் கருத்திற்கொண்டே தாம் இந்த ஒற்றுமை அரசாங்க யோசனையை முன்வைப்பதாக அவர் விளக்கமளித்துள்ளார்.
இந்த மாத முற்பகுதியில் இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சோக்கினால் 28 நாட்களுக்குள் அரசாங்கத்தை அமைக்குமாறு பணிக்கப்பட்ட முன்னாள் இராணுவத் தளபதி ஐசன்கோட், நெதன்யாகுவின் இந்த அறிவிப்பிற்கு உடனடியாகப் பதிலளித்துள்ளார்.
எதிர்வரும் டிசம்பர் 6ஆம் திகதி காலக்கெடு முடிவடையவுள்ள நிலையில், நெதன்யாகுவின் வலதுசாரி 'லிகுட்' (Likud) கட்சி கூட்டணிப் பேச்சுவார்த்தைகளை இழுத்தடிப்பதாக வெள்ளிக்கிழமை ஐசன்கோட் குற்றம் சாட்டியிருந்தார்.
அதன் பின்னணியிலேயே நெதன்யாகுவின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. உண்மையான ஒற்றுமைக்கு லிகுட் கட்சி தயாராக இருந்தால், அடுத்த 24 மணி நேரத்திற்குள் அதன் தீவிரத்தன்மையை மதிப்பிட்டு விரைவான பேச்சுவார்த்தைகளை நடத்தத் தாம் தயாராக இருப்பதாக ஐசன்கோட் தெரிவித்துள்ளார்.
கடந்த ஒக்டோபர் மாதம் நடைபெற்ற தேர்தலில், 120 ஆசனங்களைக் கொண்ட இஸ்ரேலிய பாராளுமன்றத்தில் (Knesset) நெதன்யாகுவின் கூட்டணி 53 ஆசனங்களையும், ஐசன்கோட்டின் 'யஷார்' (Yashar) கட்சி உள்ளிட்ட நான்கு யூத எதிர்க்கட்சிகளின் கூட்டணி 48 ஆசனங்களையும் கைப்பற்றியிருந்தன.
பெரும்பான்மைக்குத் தேவையான 61 ஆசனங்களை எந்தவொரு தரப்பும் பெறாத நிலையில், ஐசன்கோட் ஏற்கனவே 'இஸ்ரேல் பெய்டெய்னு' மற்றும் 'தி டெமக்ராட்ஸ்' ஆகிய கட்சிகளுடன் கூட்டணி ஒப்பந்தங்களை எட்டியுள்ளார்.
அவரது கூட்டணியின் நான்காவது அங்கத்துவக் கட்சியான 'பெயச்சாட்' (Beyachad) கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான நப்தாலி பென்னட், ஐசன்கோட் தலைமையில் லிகுட் கட்சியை உள்ளடக்கிய நல்லிணக்க அரசாங்கம் அமைப்பதற்கு நெதன்யாகு எடுத்த முடிவு சரியானது என வரவேற்றுள்ளார்.
இதேவேளை, இத்தேர்தலில் அரபு வாக்காளர்களின் வாக்குப்பதிவு அதிகரித்ததன் காரணமாக, இரண்டு அரபுக் கூட்டணிகள் வரலாறு காணாத வகையில் 19 ஆசனங்களைக் கைப்பற்றி ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுத்துள்ளன.
எனினும், பெரும்பாலான யூதக் கட்சிகள் அரபுக் கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைப்பதில்லை எனத் தேர்தலுக்கு முன்னர் உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

































