Nov 28, 2026 - 10:03 AM

உலக பௌத்த சங்க சம்மேளனத்தின் 60 ஆவது ஆண்டு நிறைவு விழாவும், 11 ஆவது பொதுச்சபையின் 02 ஆவது நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தொடரும் இன்று (28) இலங்கையில் ஆரம்பமாகின்றன.
நாகானந்த சர்வதேச பௌத்த பல்கலைக்கழகத்தை மையமாகக் கொண்டு நடைபெறும் இந்த விசேட மாநாடும் ஆண்டு நிறைவு விழாவும் இன்று முதல் எதிர்வரும் டிசம்பர் 02 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இதன் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் தற்போது இடம்பெறுகிறது.
ஆரம்ப நிகழ்வு உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்காகப் பூட்டான் மன்னர் உள்ளிட்ட பௌத்த நாடுகளின் அரச தலைவர்களுக்கு விசேட அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
உலகம் முழுவதிலுமிருந்து தேரவாத, மகாயான மற்றும் வஜ்ராயன ஆகிய பௌத்த மரபுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி 50 இற்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து சுமார் 5,000 பிக்குகள் மற்றும் பிக்குணிகள் இதில் கலந்துகொள்ளவுள்ளனர்.
இதற்காக இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி மூன்று பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் உள்ளிட்ட 500 மகாசங்கத்தினர் கலந்துகொள்ளவுள்ளனர்.
இதற்கு மேலதிகமாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பொதுமக்கள் பிரதிநிதிகள் சுமார் 800 பேர் இதில் பங்கேற்கின்றனர்.
1966 ஆம் ஆண்டு இலங்கையில் முதன்முதலில் ஆரம்பிக்கப்பட்ட உலக பௌத்த சங்க சம்மேளனத்தின் இறுதிக் கூட்டத்தொடர் 2024 ஆம் ஆண்டு நியூசிலாந்தின் ஓக்லாந்து நகரில் நடைபெற்றது.
இந்த ஆண்டு நிறைவு விழாவையொட்டி உலக அமைதி வேண்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விசேட வழிபாட்டு நிகழ்வு நவம்பர் 30 ஆம் திகதி மாலை அநுராதபுரம் ஜய ஸ்ரீ மகா போதியில் நடைபெறவுள்ளது.
மேலும், டிசம்பர் 01 ஆம் திகதி ருவான்வெலி மகா சாய மற்றும் கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையை மையமாகக் கொண்டு விசேட மத வழிபாட்டுத் தொடர்கள் நடைபெறவுள்ளன.

































