Nov 10, 2026 - 11:43 PM
By நுவரெலியா நிருபர் செ.திவாகரன்
By நுவரெலியா நிருபர் செ.திவாகரன்

நுவரெலியா, மார்காஸ் தோட்டம் பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா விடுதியொன்றில் (கபானா) பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
அம்பாறை பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய பியூமி தில்ஷானி என்ற இளம் பெண்ணே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண், நுவரெலியா - தேரிப்பஹ பகுதியில் வசிக்கும் தனது 27 வயதுடைய காதலனுடன் கடந்த 07ஆம் திகதி குறித்த சுற்றுலா விடுதிக்கு வருகை தந்து, அறையை முன்பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில், இன்று (10) காலை குறித்த பெண் விடுதிக்குள் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கிடப்பதைக் கண்ட விடுதியின் உரிமையாளர், இது தொடர்பில் நுவரெலியா பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் பெண்ணின் சடலத்தை மீட்டனர்.
இக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவராகச் சந்தேகிக்கப்படும் காதலன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், அவரைக் கைது செய்வதற்கான விசாரணைகளைப் பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சடலம் தொடர்பில் நுவரெலியா நீதவானின் தலையீட்டுடன் முதற்கட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட பின்னர், பிரேதப் பரிசோதனைக்காகச் சடலம் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

































