Nov 10, 2026 - 09:21 PM

தேசிய மக்கள் சக்தி (NPP) ஆட்சியிலுள்ள பேருவளை நகர சபையின் 2027ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட அறிக்கை ஒரு மேலதிக வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
நகர சபைச் தலைவர் மொஹமட் மாபாசிம் தலைமையில் நகர சபை மண்டபத்தில் இன்று (10) நடைபெற்ற மாதாந்தக் கூட்டத்தின் போதே இந்த வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பு நடைபெற்றதுடன், வாக்கெடுப்பு நடைபெறும் நேரத்தை ஊடகங்கள் செய்தி சேகரிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
வாக்கெடுப்பு நிறைவடைந்த பின்னரே ஊடகவியலாளர்கள் சபை மண்டபத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட்டனர்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தி மூன்று உறுப்பினர்கள் மட்டுமே தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
இருப்பினும், ஐக்கிய மக்கள் சக்தியின் 6 உறுப்பினர்களின் ஆதரவுடன் திசைகாட்டி பேருவளை நகர சபையின் ஆட்சியைக் கைப்பற்றியிருந்தது.
சபையின் எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்திய சுயாதீனக் குழுவிற்கு 7 உறுப்பினர் பதவிகள் கிடைத்திருந்தன.
இன்று நடைபெற்ற வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பின் போது, இதுவரை தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்து வந்த ஐக்கிய மக்கள் சக்தியின் இரண்டு உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்துள்ளதுடன், மற்றொரு உறுப்பினர் வாக்களிப்பில் கலந்துகொள்ளாமல் தவிர்த்துள்ளார்.
இதன்படி, வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 7 வாக்குகளும், எதிராக 8 வாக்குகளும் கிடைத்துள்ளன.
ஒரு உறுப்பினர் வாக்களிப்பதைத் தவிர்த்துள்ளார்.
வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பை ஊடகங்கள் செய்தி சேகரிக்க அனுமதிக்காமை குறித்துச் சபை அமர்வின் முடிவில் ஊடகவியலாளர்கள் தலைவரிடம் கேள்வியெழுப்பினர்.
இதன்போது பதிலளித்த தலைவர் மொஹமட் மாபாசிம், வாக்கெடுப்பின் போது தனிப்பட்ட விடயமொன்றைக் கலந்துரையாட வேண்டியிருந்ததால் ஊடகங்களுக்குச் செய்தி சேகரிக்க அனுமதி வழங்கப்படவில்லை எனத் தெரிவித்தார்.

































