Nov 2, 2026 - 11:06 AM
By மட்டக்களப்பு நிருபர் கிருஷ்ணகுமார்
By மட்டக்களப்பு நிருபர் கிருஷ்ணகுமார்

மயிலத்தமடு பிரச்சனையைப் பொறுத்தவரையிலே இனவாதத்தைத் தூண்டுகின்ற வகையிலே, அதாவது தோல்வியடைந்த ஒரு அரசியல் கலாச்சாரத்துக்குள் இருக்கிறவர்கள் தங்கள் சுயலாப அரசியலுக்காக இந்த பிரச்சனையை மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்துகொண்டிருக்கின்றார்கள் என மட்டக்களப்பு மாவட்ட விவசாய அபிவிருத்திக் குழுவின் தவிசாளர் கிருஷ்ணகோபால் திலகநாதன் தெரிவித்தார்.
மயிலத்தமடு மாதவனை என்ற பிரச்சனையை அரசாங்கம் மிக சுமுகமாக இதனை எடுத்துச் செல்வதற்கு தேவையான சகல ஏற்பாடுகளையும் தற்போது செய்திருக்கின்றது. ஆகவே பண்ணையாளர்களுக்கு எந்தவிதமான பாதிப்புகளும் இல்லாமல் இவற்றை சரியாக அவர்களுக்கு பெற்றுத்தருவதற்கான ஏற்பாடுகளை நாங்கள் செய்திருக்கின்றோம் எனவும் அவர் தெரிவித்தார்.
மயிலத்தமடு,மாதவனை மேய்ச்சல் தரைப்பிரச்சினை தொடர்பிலான உயர்மட்ட கலந்துரையாடல் நேற்று (01) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட விவசாய அபிவிருத்திக் குழுவின் தவிசாளர் கிருஷ்ணகோபால் திலகநாதன், உதவி அரசாங்க அதிபர் பிரணவன், மகாவலி அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள், பொலிஸார் என பலர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதன்போது மயிலத்தமடு,மாதவனை மேய்ச்சல் தரைப்பிரச்சினை தொடர்பில் ஆராயப்பட்டதுடன் அதன் தற்போதைய நிலைமைகள் குறித்தும் ஆராயப்பட்டது.
அத்துடன் அத்துமீறிய பயிர்ச்செய்கையாளர்களின் செயற்பாடுகள் தொடர்பிலும் அப்பகுதியில் பண்ணையாளர்கள் தாக்கப்படுவதாகவும் மாடுகள் தாக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது.
அத்துடன் அத்துமீறிய பயிர்ச்செய்கையாளர்களுக்கும் பண்ணையாளர்களுக்கும் இடையே முரண்பாடுகள் ஏற்படாத வகையில் செயற்பாடுகளை முன்னெடுப்பது குறித்தும் ஆராயப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த திலகநாதன்,
மயிலத்தமடு இந்த பிரச்சனையை வெளியிலே இருக்கின்ற ஒரு அணி இவர்களை இயக்குவதை எங்களால் பார்க்கக்கூடியதாக இருக்கிறது. உண்மையிலேயே பண்ணையாளர்கள் எதிர்நோக்குகின்ற சில பிரச்சனைகள் சம்பந்தமாக அரசாங்கம் ஒரு தீர்வினை தந்திருக்கிறது. அந்த வகையிலே மயிலத்தமடுவிலே 1,570 ஏக்கரை விடுவிக்க வேண்டும் என்கின்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டிலே எந்தவொரு மாற்றமும் இல்லை.
அது சம்பந்தமாகவும் கடந்த பாராளுமன்ற கூட்டத்திலும் எங்களது அமைச்சர் பிமல் ரத்நாயக்க மிக தெளிவான ஒரு விளக்கத்தை கொடுத்திருந்தார். ஆகவே இது ஜனாதிபதியால் அறிவிக்கப்பட்டிருந்தாலும், ஒருசில நிர்வாக ரீதியான தடங்கல்கள் காரணமாக இன்றும் அவை கிடைக்கப்பெறாமல் இருக்கிறது.
ஆகவே அவற்றினை விரைவுபடுத்துவதற்கு தேவையான கள சூழ்நிலை தற்போது உருவாக்கப்பட்டிருக்கிறது. நாங்கள் அறிகின்றோம் அங்கு மயிலத்தமடு பகுதியிலே பண்ணையாளர்களுக்கு சில இடையூறுகள் ஏற்படுவதாக எங்களுக்கு தகவல்கள் கிடைத்திருக்கின்றன.
ஆகவே அந்த தகவல்கள் சமூக வலைத்தளங்கள் ஊடாக பாரிய பிரச்சனைகளாக எடுத்துக்கூறப்பட்டாலும், அங்கிருக்கின்ற உண்மையான நிலவரங்கள் பற்றி பொலிசாரிடம் நாங்கள் வினவியபோது முறையான முறையிலே சில முறைப்பாடுகள் இடம்பெறவில்லை என்பதை அவர்கள் தெரிவித்திருந்தார்கள். யாரோ ஒருவரின் தூண்டலின் அடிப்படையிலே அவர் தாக்கப்பட்டிருப்பதாக சில தகவல்கள் கிடைக்கப்பெற்றன.
ஆகவே அதற்கு நீதியான ஒரு விசாரணையை செய்யுமாறு அரசாங்க அதிபர் அவர்களால் கோரப்பட்டது. அதனை பொலிஸாரும் ஏற்றுக்கொண்டு நீதியான விசாரணை அதற்காக செய்வதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. தொடர்ச்சியாக பண்ணையாளர்கள் அங்கு தங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக சில சமூக வலைத்தளங்கள் ஊடாக பதிவினை இட்டிருந்தார்கள். அந்த விடயம் சம்பந்தமாகவும் கலந்தாலோசித்தோம்.
ஏனைய காலங்களில் இருந்த அரசாங்கங்களைப் போல் அல்லாமல் இந்த அரசாங்கம் மக்களின் உண்மையான உணர்வுகளைப் புரிந்துகொண்ட, அதேபோல் பண்ணையாளர்களின் உண்மையான உணர்வுகளைப் புரிந்துகொண்ட அரசாங்கம் தற்போது இருக்கின்றது.
ஜனாதிபதி அவர்களின் வேலைத்திட்டம் இன்று கிராம மக்கள் வரை அது வியாபித்திருக்கிறது. ஆகவே அவர்களுக்குத் தெரியும் இந்த நிலம் நிச்சயமாக பண்ணையாளர்களுக்குக் கிடைக்கும் என்று. ஆகவே இதனை அறிந்த இந்த பொறுத்துக்கொள்ள முடியாத அரசியல்வாதிகள் தாங்கள் ஆர்ப்பாட்டங்கள் மூலம் இதனை பெற்றுக்கொடுத்தோம் என்பதைக் காண்பிப்பதற்கான ஒரு நாடகத்தைத்தான் திட்டமிட்டு அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.
ஆகவே நாங்கள் பண்ணையாளர்களுக்கு மிக தெளிவாக குறிப்பிடுகின்றோம், ஆகவே நீங்கள் அவசரப்பட தேவையில்லை. உங்களுக்காக உங்களுக்கான அந்த பிரதேசத்தில் கால்நடைகளை வைத்துக்கொள்வதற்கு தேவையான சாதகமான நிலைப்பாட்டை எங்களால் தரக்கூடியதாக இருக்கும் என தெரிவித்தார்.

































