Oct 13, 2026 - 04:07 PM

திக்கம் வடிசாலையை மீள இயக்குவதற்குச் சாத்தியமான அனைத்து வழிகளிலும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதுடன், அதனை ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட உற்பத்தி நிலையமாக மீளச் செயற்படுத்துவதற்கான திட்டங்களைத் தயாரிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன், திக்கம் வடிசாலையை மையப்படுத்திப் பனை அபிவிருத்திச் சபைக்கும் தனியார் நிறுவனத்துக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் சட்டவலு தொடர்பில் ஆராய்ந்து, சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகர், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் ஆகியோரின் இணைத் தலைமையில், திக்கம் வடிசாலையை மீள இயக்குவது தொடர்பான கலந்துரையாடல் இன்று (13) ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
இதன்போது கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்,
கடந்த காலங்களில் திக்கம் வடிசாலை முடக்கப்பட்ட நிலைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும், கடந்தகால ஆட்சிக் காலத்தில் சங்கத்தினருக்குத் தெரியாமல் தனியார் நிறுவனமொன்றுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். குறித்த ஒப்பந்தம் தொடர்பில் சந்தேகங்கள் நிலவுவதால், அவை குறித்து முழுமையான விசாரணையை முன்னெடுப்பதில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
எனினும், ஒப்பந்தம் தொடர்பான சிக்கல்களைச் சுட்டிக்காட்டிக்கொண்டு திக்கம் வடிசாலையைத் தொடர்ந்து இயங்காமல் வைத்திருக்க முடியாது எனக் குறிப்பிட்ட அவர், அதனை மீள இயங்கச் செய்வதில் காணப்படும் தடைகளை நீக்குவதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியம் என்றும் வலியுறுத்தினார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர் இ.சந்திரசேகர்,
நீண்டகாலமாகத் தீர்வின்றித் தொடரும் திக்கம் வடிசாலை விவகாரத்துக்குத் தீர்வுகண்டு, அதனை மீண்டும் இயங்கச் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனத் தெரிவித்தார். இதற்கான உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
பனை அபிவிருத்திச் சபைக்கும் தனியார் நிறுவனத்துக்கும் இடையில் ஏற்கெனவே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதால், அதனைச் சட்டரீதியாக ஆராய்ந்து ஆலோசனை பெறுவது அவசியம் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். திக்கம் வடிசாலையை நிர்வகிப்பதற்கான அனுமதிப்பத்திரத்தைத் தங்களிடம் வழங்குமாறு சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், அதனை வழங்க முடியுமா என்பதைத் தீர்மானிப்பதற்கு, நடைமுறையிலுள்ள ஒப்பந்தத்தின் சட்டவலுவை முதலில் ஆராய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கருத்துத் தெரிவிக்கையில்,
கடந்த காலங்களில் மாவட்டச் செயலராகப் பணியாற்றியபோதும் திக்கம் வடிசாலையை மீள இயக்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தொடர்பில் எடுத்துரைத்தார். தற்போதைய ஒப்பந்தத்தின் காரணமாக, குறித்த சங்கத்தினரால் உரிய பயன்களைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்படுவதையும், சங்கத்தின் அங்கத்தவர்களுக்கான நன்மைகள் கிடைக்காத நிலை தொடர்பிலும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, ஒப்பந்தத்தின் சட்டவலு தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்றுக்கொள்வதுடன், எதிர்காலத்தில் திக்கம் வடிசாலையை எவ்வாறு மீள இயக்குவது என்பது குறித்தும் விரிவாக ஆராய வேண்டும் என ஆளுநர் வலியுறுத்தினார். குறிப்பாக, அனுமதிப்பத்திரத்தைச் சங்கத்தின் வசம் வைத்துக்கொண்டு, தனியார் முதலீட்டாளர்களுடன் இணைந்து வடிசாலையை இயக்குவதற்கான சாத்தியப்பாடுகள் ஆராயப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
கூட்டுறவுத் துறையை வலுப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் செயற்பட்டு வருவதையும் சுட்டிக்காட்டிய ஆளுநர், திக்கம் வடிசாலையை மீண்டும் கூட்டுறவுச் சங்கத்தின் ஊடாக வலுப்படுத்துவதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
கலந்துரையாடலில் கருத்துத் தெரிவித்த பனை அபிவிருத்திச் சபையின் தலைவர், திக்கம் வடிசாலை தொடர்பான ஒப்பந்தம் 2022 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டதாகவும், அது 25 ஆண்டுகள் நடைமுறையில் இருக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். எனினும், அதன் பின்னர் வடிசாலை மூடப்பட்டமை மற்றும் அதனை மீண்டும் இயங்கச் செய்வதில் காணப்படும் சட்டச் சிக்கல்கள் உள்ளிட்ட விடயங்கள் விரிவாக ஆராயப்பட வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதன்போது, வடமராட்சி பனை தென்னை வளக் கூட்டுறவுச் சங்கங்களின் கொத்தணிப் பிரதிநிதிகள், திக்கம் வடிசாலையை மீள இயக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதற்கு நன்றியைத் தெரிவித்தனர். அத்துடன், கொத்தணியின் பெயரில் அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டால், ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட முதலீட்டாளர்களுடன் இணைந்து செயற்பட முடியும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
கலந்துரையாடலின் முடிவில், பனை அபிவிருத்திச் சபைக்கும் தனியார் நிறுவனத்துக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் சட்டவலு தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனையைப் பெற்றுக்கொள்வதற்கும், திக்கம் வடிசாலையைச் சாத்தியமான வழிகளில் மீள இயக்கி, ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட உற்பத்தியை முன்னெடுப்பதற்குத் தேவையான திட்டங்களைத் தயாரிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. இந்நடவடிக்கைகளை விரைவாக முன்னெடுத்து முடிப்பதற்கும் இணக்கம் காணப்பட்டது.
இக்கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் ஜெ.றஜீவன், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், யாழ். மாவட்டச் செயலாளர், வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர், பனை அபிவிருத்திச் சபையின் தலைவர், முகாமையாளர் மற்றும் சபையின் உறுப்பினர்கள், கூட்டுறவுச் சங்கங்களின் கொத்தணிகள் மற்றும் சமாசங்களின் பிரதிநிதிகள், அமைச்சர் மற்றும் ஆளுநரின் பிரத்தியேகச் செயலாளர்கள், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் இணைப்பாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

































